21 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதி

சென்னை:வரும் கல்வி ஆண்டில், 21 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர, இலவச
போக்குவரத்து வசதிகளை செய்ய, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒவ்வொரு பள்ளியும், தங்கள் பகுதியில் வசிக்கும், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இலவச கல்வி வழங்க வேண்டும். இதில், சாதாரண பொதுமக்கள், பழங்குடியின பகுதி, குக்கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் என, அனைவரையும் தேடிப்பிடித்து, அவர்களுக்கு கல்வி வசதி அளிக்க வேண்டும்.
இந்த அடிப்படையில், மாவட்டம் தோறும், நடப்பு கல்வி ஆண்டில் அடையாளம் காணப்பட்ட, மாணவ, மாணவியரில் பலர், பள்ளிக்கு வர போக்குவரத்து வசதி இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 21 ஆயிரத்து, 392 மாணவ, மாணவியருக்கு, வரும் கல்வி ஆண்டில், இலவச போக்குவரத்து வசதி செய்ய, தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த மாணவர்களை, அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு அழைத்து வர, வேன் மற்றும் ஆட்டோ வசதியை இலவசமாக செய்து தர வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.