10ம் வகுப்பு தேர்வு இன்று பிற்பகல் துவக்கம்

சென்னை:பத்தாம் வகுப்பு பொது தேர்வு, இன்று துவங்குகிறது. இதில், 9.97 லட்சம் பேர்
பங்கேற்கின்றனர்.

லோக்சபா தேர்தல் காரணமாக, தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க வேண்டி உள்ளது. அதனால், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கும் போதே, 10ம் வகுப்பு தேர்வுகளும் துவங்குகின்றன.பிளஸ் 1 வகுப்புக்கு, காலையில் தேர்வு நடக்கும் நிலையில், பிற்பகலில், 10ம் வகுப்பு தேர்வு நடக்கிறது. இரண்டு மொழி பாடங்களுக்கு மட்டும், பிற்பகல், 2:00 மணி முதல், 4:45 மணி வரை தேர்வு நடக்கிறது.
இதையடுத்து, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கும், விருப்ப மொழிக்கும், காலை, 10:00 மணி முதல், மதியம், 12:45 மணி வரை, தேர்வு நடத்தப்படுகிறது.இன்று பிற்பகல் துவங்க உள்ள, 10ம் வகுப்பு தேர்வில், தமிழகம், புதுச்சேரியில், 12 ஆயிரத்து, 546 பள்ளிகளை சேர்ந்த, 9.59 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர். மேலும், 38 ஆயிரம் தனித் தேர்வர்களும் பங்கேற்கின்றனர். இவர்களுடன் சேர்த்து, 9.97 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.
மாநிலம் முழுவதும், 3,731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதுவோரில், 4.76 லட்சம் பேர் மாணவியர். நான்கு திருநங்கையர், தனி தேர்வர்களாக தேர்வு எழுத உள்ளனர்.
சென்னையில், 567 பள்ளிகளை சேர்ந்த, 50 ஆயிரம் பேர், 213 மையங்களில், தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரியில், 302 பள்ளிகளை சேர்ந்த, 16 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை - புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை சிறைகளில், 152 கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வில், முறைகேடுகளை தடுக்கவும், கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், 23 அதிகாரிகள் அடங்கிய குழுவும், 5,500 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன