என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் ‘அரியர்’ தேர்வுகளை அடுத்த செமஸ்டரிலேயே எழுதலாம் - அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழத்தில் பின்பற்றப்பட்டு வந்த பழைய நடைமுறையின்படி, முதல் பருவ தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்த பாடங்களை (‘அரியர்’) 2-வது பருவத்தில் அதனை மறுபடியும் எழுத முடியும்.

இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ‘மாணவர்கள் முதல் பருவத்தில் ‘அரியர்’ வைத்திருந்தால் அதனை 3-வது பருவத்தில் தான் எழுத முடியும். 2-வது செமஸ்டரில் ‘அரியர்’ வைத்திருந்தால் அதனை 4-வது அல்லது 6-வது செமஸ்டரில் தான் எழுத முடியும்’, என்று மாற்றம் செய்து புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

இறுதி செமஸ்டர் மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில் தோல்வியடைந்தால் அந்தப்பாடங்களை எப்போது எழுதி தேர்ச்சி பெறுவது? என்பது உள்ளிட்ட எந்த விளக்கமும் அந்த நடைமுறைகளில் தெரிவிக்கப்படவில்லை.

இந்த புதிய நடைமுறையால் ‘அரியர்’ தேர்வுகளை எழுத வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், என்ஜினீயரிங் படிப்புக்கான ஆண்டு முடித்த பின்னரும் ‘அரியர்’ இருந்தால் அதனை எழுதி தேர்ச்சி பெறுவதற்கு கூடுதல் காலம் செலவிடப்படுவதாகவும், இதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாகவும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உள்பட நிர்வாகிகள், பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி கால அவகாசம் கோரியதின் விளைவாக, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அகாடமிக் கவுன்சில், 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்து, புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தோல்வியடைந்த பாடத்துக்கான ‘அரியர்’ தேர்வுகளை, மறுதேர்வாக அடுத்து வரக்கூடிய செமஸ்டரிலேயே மாணவர்கள் எழுதிக்கொள்ளலாம்.

அதன் விவரம் வருமாறு:-

முதல் செமஸ்டரில் ஏதேனும் பாடத்தில் தோல்வியடைந்தால், அதற்கான அரியரை அடுத்து வரக்கூடிய 2-வது செமஸ்டரிலேயே எழுதமுடியும். முதல் செமஸ்டரில் முழு தேர்ச்சி பெறாமல் 5-வது செமஸ்டருக்கு செல்லமுடியாது. அதேபோல 2-வது செமஸ்டர் முழுமையடையாமல் 6-வது செமஸ்டருக்கு செல்லமுடியாது. 7-வது செமஸ்டருக்கு செல்லும் மாணவர்கள் 3-வது செமஸ்டரில் அரியர் வைத்திருக்க கூடாது. 8-வது செமஸ்டருக்கு செல்லும் மாணவர்கள் 4-வது செமஸ்டரில் அரியர் வைத்திருக்க கூடாது.

8-வது செமஸ்டர் முடிவில், 5-வது செமஸ்டரில் குறிப்பிட்ட மாணவர் ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்திருந்தால், அம்மாணவர், தன்னுடைய 5-வது செமஸ்டரை, அந்த குறிப்பிட்ட கல்வியாண்டில் 5-வது செமஸ்டரில் படிக்கும் மாணவர்களுடன் இணைந்து படித்து, அதன்பின்னர் தேர்வு எழுத வேண்டும்.

இந்த விதிமுறை 6, 7, 8-வது செமஸ்டருக்கும் பொருந்தும்.

‘அரியர்’ வைத்திருக்கும் செமஸ்டருக்கு அடுத்து வரும் 3 செமஸ்டர்களை மாணவர் கள் தேர்வு எழுதி கொள்ளலாம். அதற்கு அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆய்வக பாடங் கள், திட்ட பணி (ப்ராஜக்ட் ஒர்க்) உள்ளிட்டவற்றில் தோல்வியடைந்த மாணவர்கள், மீண்டும் மறுபதிவு மேற்கொள்ள வேண்டும் என்றும், இவற்றிற்கான சராசரி உள்ளட்டு மதிப்பெண்களாக 50 மதிப்பெண்களையும் பெற வேண்டும். இந்த புதிய விதி முறைகள் 2017-18 மற்றும் 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் தங்கள் படிப்பை தொடங்கியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

2019-20-ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் சேரக்கூடிய மாணவர்கள் முதல் செமஸ்டரில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவர்கள் இறுதியாண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு செமஸ்டர் தேர்வுக்கு 75 சதவீத வருகைப்பதிவை மாணவர்கள் வைத்திருக்க வேண்டும். விபத்து உள்ளிட்ட மருத்துவ காரணத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 65 சதவீத வருகை பதிவு போதுமானது. இந்த அனுமதியும் ஒருமுறை மட்டுமே மாணவருக்கு வழங்கப்படும்.

அரியர் தேர்வு விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்புதிய விதிமுறைகள், பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழுவின் ஒப்புதலுக்குப்பின், உடனடியாக செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.