ஒரு நபரை அவர் அனுமதியின்றி குரூப்களில் சேர்க்க முடியாது'..வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி

வாட்ஸ்அப்பில் இருக்கும் குரூப் மூலமாக ஒரே நேரத்தில் பலருடன் கலந்துரையாடுவது, தகவல்களை எளிதாகப் பகிர்ந்துகொள்வது எனப் பல விஷயங்களைச் செய்ய முடிகிறது.
இப்படி உபயோகமாக இருக்கும் குரூப்கள் சிலருக்குத் தொந்தரவாகவும் அமைந்து விடுவதுண்டு. அதற்குக் காரணம் வாட்ஸ்அப்பில் இப்போது யார் வேண்டுமானாலும் எந்த குரூப்பில் வேண்டுமானாலும் ஒருவரை அனுமதியின்றி சேர்த்து விட முடியும். விருப்பமில்லாமல் ஒரு குரூப்பில் சேர்க்கப்படுவதால் அது சிலருக்கு தொல்லை தரும் விஷயமாக அமைந்து விடுகிறது. தற்போது இந்தச் சிக்கலை தீர்க்க முடிவு செய்திருக்கிறது வாட்ஸ்அப். அதன்படி இனிமேல் ஒருவரின் அனுமதி இல்லாமல் ஒரு குரூப்பில் அவரைச் சேர்க்க முடியாது.இந்த வசதி WhatsApp Settings > Account > Privacy > Groups என்ற பகுதியில் கொடுக்கப்படும். இதில் Everyone, My Contacts, Nobody என்ற மூன்று தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
இதன் மூலமாக ஒரு குரூப்பில் இணைப்பதற்கு யாரெல்லாம் அழைப்பை விடுக்க முடியும் என்பதைத் தேர்வு செய்துகொள்ளலாம். அழைப்பை ஏற்காவிட்டால் 72 மணி நேரங்களில் அழைப்பானது தானாகவே காலாவதியாகிவிடும்.
இந்த வசதி தற்பொழுது ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில்பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் ஆண்ட்ராய்டு பதிப்புக்கும் இந்த வசதி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது