ஆசிரியர்களை சிறையில் அடைத்தது, மின் விளக்கை அணைத்தது போன்ற செயல்களை செய்ததுடன், இடமாறுதல் செய்யப் போவதாக எந்த காலத்திலும் திமுக மிரட்டவில்லை
என்று எம்எல்ஏ தங்கம் தென்னரசு பேரவையில் அதிமுக மீது புகார் தெரிவித்தார். சட்டப் பேரவையில் 2019-2020ம்
ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் சட்டப் பேரவையில் நேற்று நடந்தது. அப்போது ஆளும்கட்சி உறுப்பினர் செம்மலை பட்ஜெட் குறித்து பாராட்டிப்
பேசிக்கொண்டு வந்தார்.
இடையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து பேசும் போது திமுகவின்
ஆதரவு நிலை குறித்து பேசினார். அதனால்
பேரவையில் சிறிது நேரம் காரசாரமான விவாதம் நடந்தது.
செம்மலை அதிமுக(மேட்டூர்): சமீபத்தில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் போராட்டம் நடந்தது. அவர்கள் போராட்டத்தை கைவிட அரசு தரப்பில் நடவடிக்கை
எடுக்கப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவு தருவது போல திமுகவினர் நின்று பேசினர். அவர்களுக்கு புத்திமதி சொல்லாமல்
எரியும் தீயில் எண்ணெய்விட்டது போல நடந்துகொண்டீர்கள்.
தங்கம் தென்னரசு, திமுக (திருச்சுழி): திமுக பற்றி ஆளும்கட்சி உறுப்பினர் குறைகூறுகிறார்.
திமுக ஆட்சியில் இது போல போராட்டம் நடந்ததா? ஆனால்
அதிமுக போல அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களை சிறையில் அடைக்கவில்லை, கழிப்பிடங்களை பூட்டவில்லை, தண்ணீரை
நிறுத்தவில்லை, மின் விளக்குளை அணைக்கவில்லை. இது போல எந்த அரசும் செய்யவில்லை. அத்துடன் இடமாறுதல் செய்வோம் என்று மிரட்டினோமா?
துணை
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தின் மீது சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது குறித்து விசாரணை நடக்கிறது.