மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி?

மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தாமல், வேலைவாய்ப்பு பதிவு
மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிச்சாண்டி கோரிக்கை விடுத்தார்.

சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:


அ.தி.மு.க., - நடராஜ்: சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள, பார்வை குறைபாடுடைய, மாற்றுத் திறனாளிகளுக்கு, வேலைவாய்ப்பு வழங்க, அரசு ஆவன செய்யுமா?அமைச்சர், செங்கோட்டையன்: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 2012, 2013, 2014ம் ஆண்டுகளில் நடந்த, தகுதி தேர்வுகளில், 417 மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி பெற்றனர்.இவர்களில், 239 பேர் நியமனம் செய்யப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர்.

நடராஜ்: மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, பணி நியமனம் நடந்து வருகிறதா?

அமைச்சர், செங்கோட்டையன்: இட ஒதுக்கீட்டின்படி, பணி நியமனம் நடந்துள்ளது.

தி.மு.க., - பிச்சாண்டி: மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி தேர்வு நடத்தாமல், பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்குமா? பல பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, மூப்பு அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

அமைச்சர், செங்கோட்டையன்: காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், 7,500 ரூபாய் மாத தொகுப்பூதியத்தில், ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.