60 ஆண்டுக்கு ஒருமுறை வரும் அரியவாய்ப்பு: இன்று தைஅமாவாசை

சூரியனும், சந்திரனும் இணையும் நாள் அமாவாசை. இந்நாளில் மறைந்த
முன்னோர்களுக்கு பசி, தாகம் ஏற்படுவதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது. அதைப் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் பிதுர் வழிபாடு செய்கிறோம். தந்தைவழி (பித்ரு வர்க்கம்), தாய்வழி (மாத்ரு வர்க்கம்), குருவழி (காருணீக வர்க்கம்) என மூவகையாக செய்யப்படும் இந்த வழிபாடு 'தர்ப்பணம்' எனப்படும். 'திருப்திப்படுத்துதல்' என்பது இதன் பொருள். அப்போது சொல்லும் மந்திரங்கள் அர்த்தம் நிறைந்தவை. இதை சரியாக கேட்டு பிழையின்றி சொல்வது அவசியம்.



தேதியா... திதியா...
முன்னோரை வழிபடும் எண்ணம் இருந்தாலும் தாய், தந்தை இறந்த தேதிகளில் சிலர் வழிபடுகின்றனர். இது தவறு. தேதி என்பது வெறும் அடையாளம் தான். சாஸ்திரப்படி திதியன்று தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாதம், பட்சம், (வளர்பிறை, தேய்பிறை), திதியை சரியாக அறிந்தும், முன்னோர்களை வரிசைப்படுத்தியும் திதி கொடுப்பது அவசியம்.


மகோதய அமாவாசை:
ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகள் சிறப்பானவை. திங்கட்கிழமையும், திருவோண நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து 60 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகோதய அமாவாசையாக இன்று வருவது சிறப்பு. இந்நாளில் ஆறு, கடலில் தர்ப்பணம் செய்வது புண்ணியத்தை தரும்.

- எஸ்.சந்திரசேகர்