பிப்.,6 விண்ணில் பாய்கிறது ஜிசாட் 31 செயற்கைகோள்

புதுடில்லி : இந்தியாவின் தகவல் தொடர்பு வசதிக்காக "ஜிசாட்-31" செயற்கை கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து, வருகிற 6ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

இஸ்ரோவின் 40ஆவது தகவல் தொடர்பு செயற்கை கோளான இந்த "ஜிசாட்-31" செயற்கை கோள், பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவில் இருந்து "ஏரியன்-5" ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. "ஜிசாட்-31" செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கை கோள், டிவி ஒளிபரப்பு, டி.டி.எச். சேவை, மொபைல்போன் சேவை உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.இந்திய நேரப்படி அதிகாலை 2.31 மணிக்கு இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு விண்ணில் பயணித்து ஜிசாட் 31 சேவையாற்ற உள்ளது. அரபிக் கடல், வங்கக்கடல், இந்திய பெருங்கடல் போன்ற கடல் பகுதிகளில் பயணிக்கும் போதும் தொலைத் தொடர்பு சேவை வழங்க இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.