வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தங்களுக்கு கடைசி வாய்ப்பு: பிப். 23, 24 சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மற்ற திருத்தங்கள் செய்ய கடைசி வாய்ப்பாக சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில்
வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் பிப். 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களுக்கு நடைபெற உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த 31 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
வாக்காளர்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளனவா என சரிபார்த்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
 தற்போது வாக்காளர் பட்டியலில் தம்முடைய பெயர்கள் இடம் பெறவில்லை என்று அறிந்தவர்களுக்கு அவர்களுடைய பெயர்களை சேர்ப்பதற்கு ஏதுவாக வரும் 23.02.2019 (சனிக்கிழமை) மற்றும் 24.02.2019 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இருதினங்களுக்கு அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது
இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
 அவ்வமயம் பொதுமக்கள் தத்தம் பெயரை சேர்ப்பதற்கு படிவம் 6, பெயரை நீக்குவதற்கு படிவம் 7, திருத்தங்களுக்கு படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 ஏ ஆகியவற்றை அளிக்கலாம்.
மேலும், மாற்றுத்திறனாளிகளை கண்டறிவதற்கு ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கும் மேற்படி மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எவரேனும் வந்தால் அவருடைய வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை குறிப்பெடுத்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி வாக்காளர் எவரேனும் தம்பெயரை பதிவு செய்யாமல் இருப்பின் அவருக்கு படிவம் 6 வழங்கி பூர்த்தி செய்து பெற்று கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்தலின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான வசதிகளை செய்து கொடுப்பதற்கு ஏதுவாக மாற்றுத்திறனாளி வாக்காளர் அனைவரும் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே நடைபெறும் இந்த வாக்காளர் சிறப்பு முகாமை பயன்படுத்தி கொண்டு தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையின் எண் விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் தம்முடைய வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்து இந்த சிறப்பு முகாமின் போது வாக்காளர்களுக்கு சிறந்த சேவை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறும், பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது