அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் இன்று ஒரு நாள், 'ஸ்டிரைக்'

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ -
ஜியோ'வை தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள், இன்று ஒரு நாள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 'போராட்டத்தில் ஈடுபடுவோரின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதவை' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார். இதனால், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். அதைத் தொடர்ந்து, அரசு அங்கீகாரம் பெற்ற சில சங்கங்கள், இன்று ஒரு நாள், அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.தலைமை செயலக சங்கத் தலைவர், பீட்டர் அந்தோணிசாமி கூறியதாவது:கைதான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்; அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும். இல்லையெனில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவோம் என, முதல்வர் மற்றும் தலைமை செயலரிடம் மனு அளித்தோம்.யாரும் கண்டு கொள்ளாததால், இன்று திட்டமிட்டபடி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். முதல்வர் எங்களை அழைத்து பேசாவிட்டால், அடுத்கட்ட நடவடிக்கை குறித்து, நாளை முடிவு செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.பங்கேற்பில்லைதமிழ்நாடு அரசு அலுவலர் கழகம், 'சி - டி பிரிவு' இன்றைய, வேலை நிறுத்தத்தில் பங்கேற்க போவதில்லை என, அந்த அமைப்பின் மாநில தலைவர் சவுந்தரராஜன், தெரிவித்துள்ளார்.ஏழு பேர், 'சஸ்பெண்ட்'தலைமை செயலகத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட, சட்டசபை செயலகம், நிதித்துறை, உள்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, வேளாண் துறை சார்ந்த, ஏழு ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காலத்தில், சென்னையை விட்டு, எங்கும் செல்லக் கூடாது என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது.கும்பல் சேர கூடாது!தியாகிகள் தினத்தையொட்டி, இன்று, தலைமை செயலக வளாகத்தில் உள்ள, ராணுவ மைதானத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். தலைமை செயலக ஊழியர்கள், இன்று வேலை நிறுத்தம் செய்வதால், உறுதி மொழி ஏற்பில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.போராட்டத்தை கைவிட அரசு வலியுறுத்தியும், சங்க நிர்வாகிகள் ஏற்கவில்லை. இதனால், போராட்டத்தை ஒடுக்க, 'தலைமை செயலக வளாகத்தில், ஊழியர்கள் அனுமதியின்றி கூடக்கூடாது' என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.