மாநகராட்சி ஆசிரியர்களை திருப்பி அனுப்ப முடிவு!

கடந்த ஏழு ஆண்டுகளில், கோவை மாநகராட்சி பள்ளிகளில், ஏழாயிரம் மாணவர்கள் சேர்க்கை குறைந்திருப்பதால், விகிதாச்சாரப்படி கணக்கிட்டு, வரும் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறைக்கே, ஆசிரியர்களை திருப்பி அனுப்ப, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கோவை மாநகராட்சி சார்பில், 83 பள்ளிகள் நடத்தப்படுகின்றன; 827 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
 நடப்பு கல்வியாண்டில், 21 ஆயிரத்து, 149 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இது, 2011-12 கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில், 7,696 மாணவ மாணவியர் குறைவு. ஒவ்வொரு கல்வியாண்டின்போதும், செப்., வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இருப்பினும், மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது.மாநகராட்சி நடத்தும் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறையில் இருந்தே ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
 சம்பளமும் அத்துறையில் இருந்தே வழங்கப்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்தபோது, படிப்படியாக குறைந்து வருவது தெரியவந்துள்ளது. 2011ல், 28 ஆயிரத்து, 845 மாணவ மாணவியர் படித்துள்ளனர். 2012ல், 2,657 பேர் குறைந்துள்ளனர். 2013ல், 1,442 மாணவர் சேர்க்கை குறைந்திருக்கிறது. இவ்வாறு, ஒவ்வொரு ஆண்டும், 1,000 முதல், 1,500 மாணவர்கள் வரை சேர்க்கை குறைந்த வண்ணம் இருக்கிறது.மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், காலி பணியிடம் நிரப்புகிறோம் என்ற பெயரில், வெளியூரில் இருந்து, வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்களை கூடுதலாக நியமித்து வருகின்றனர்.
 தற்போது தேவைக்கு அதிகமாக, கோவை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரப்படி கணக்கிட்டபோது, நுாற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிவது தெரியவந்தது. இருந்தாலும், மாநகராட்சி உயரதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.கடந்த சில ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், அதிகாரிகளுக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டது.
மாணவர் சேர்க்கை குறைவு; அதிகப்படியான ஆசிரியர் இருந்தும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்துக் காட்ட முடியவில்லையே என்ற கேள்வி எழுந்தது. அதன் காரணமாக, தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறைக்கே திருப்பி அனுப்ப, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.'செலவினம் தவிர்க்கலாம்'மாநகராட்சி கல்விப்பிரிவினர் கூறுகையில், 'வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை கண்காணிக்கப்படும்.
மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, உபரியாக இருப்போரை தேர்வு செய்து, பள்ளி கல்வித்துறைக்கே அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. சில பள்ளிகளில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் மாணவர்கள் படிக்கின்றனர். அப்பள்ளிக்கு பாடம் வாரியாக ஆசிரியர்கள் நியமித்திருப்பதால், நிதி விரயமாகிறது. அவ்வளவு ஆசிரியர்கள் நியமிப்பது அவசியமற்றது. அதனால், சொற்ப எண்ணிக்கையிலான மாணவர்களை அருகாமையில் உள்ள பள்ளியோடு இணைத்தால், தேவையற்ற செலவினத்தை தவிர்க்கலாம்' என்றனர்