பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்' ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு

ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது; போராடும் ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பவும்
உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், 22 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் பிறப்பித்துள்ள உத்தரவு:அரசு பணிகள் பாதிக்கும் வகையில், 'ஸ்டிரைக்' போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது, அரசு பணியாளர் நடத்தை விதிகளின் படி விதிமீறலாகும். 'அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது; அது சட்ட விரோதம்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.தற்போது, பள்ளிகளில் திருப்புதல் தேர்வு, செய்முறை தேர்வுக்கான பயிற்சிகள் துவங்கியிருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் போராட்டத்தால், இந்த பயிற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. செய்முறை தேர்வுகள் நடக்காமல், பாடம் நடத்தப்படாமல், அரசு, அரசு உதவி பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அடிப்படை தொடக்க கல்வி மாணவர்கள் நிலை, இன்னும் மோசமாகும்.அதனால், அரசு பள்ளிகளின் நிலை மோசமாகி, எந்த பெற்றோரும், அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க மாட்டார்கள். இந்த நிலையை தடுக்க, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.வேலைக்கு வராத நாட்கள், அனுமதி பெறாத விடுமுறையாக கணக்கிடப்பட்டு, சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்கப்படாது. அனுமதி பெறாமல், பணிக்கு வராத ஊழியர்களின் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.தற்காலிக விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட, எந்த வகை விடுப்பும், போராட்ட காலத்தில் வழங்கப்படாது. மருத்துவ விடுப்பு கேட்டு, போலியான தகவல்களை அளிப்பது, மருத்துவ விடுப்பு ஆய்வுக் குழுவுக்கு தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இது குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தி, 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும். அதை மீறி, போராட்டத்தில் பங்கேற்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

'டிஸ்மிஸ்!'பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்ட எச்சரிக்கையில், 'பள்ளி கல்வித் துறையில் தற்காலிகமாக பணியாற்றுபவர்கள், போராட்டத்தில் பங்கேற்பது தெரிய வந்தால் அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவர்' என கூறப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை புறக்கணிக்காதீங்ககுடியரசு தினம், நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:குடியரசு தினத்தை, நாளை அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும். கொடிமரத்தை புனரமைத்து, சரிபார்க்க வேண்டும். நாட்டிற்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், பள்ளிகளில் குடியரசு தின விழாவிற்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க வேண்டும். இதற்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், வனத்துறை உதவியுடன் மரக்கன்றுகள் நட்டு, அவற்றை பராமரிக்க வேண்டும். அன்றைய தினம், நாட்டுப் பற்று, பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, மாணவர்கள் வாயிலாக நடத்த வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.