விரைவில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு:பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:




தி.மு.க., - இன்பசேகரன்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, குத்தலஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்த வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: அரசு நிர்ணயித்துள்ள நிபந்தனைகளை, பூர்த்தி செய்யாததால், அந்தப் பள்ளியை, தரம் உயர்த்த வாய்ப்பில்லை.

இன்பசேகரன்: தர்மபுரி மாவட்டம், கல்வியில் பின்தங்கியுள்ளது. எட்டு ஆண்டுகளாக, அம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தும், கல்வியில் முன்னேற்றம் இல்லை. எனவே, அரசு நிபந்தனைகளை தளர்த்தி, பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டை யன்: உங்கள் தொகுதியில், இந்த ஆண்டு, ஒரு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், ஐந்து பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. நீங்கள் கேட்ட பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால், தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்பசேகரன்: முன்மொழிவுகள் அனுப்பிய பள்ளிகள் அனைத்தும், தரம் உயர்த்தப்படுமா, என்பதை தெரிவிக்க வேண்டும். பென்னாகரம் தொகுதியில், 146 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. ஐந்து பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. சிறப்பு கவனம் செலுத்தி, காலியிடங்களை நிரப்ப வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பல ஆசிரியைகள், மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளனர். தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, மதுரை உயர் நீதிமன்றம் கிளை தடை விதித்துள்ளது. தடையை நீக்கிய பின், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க., - கிரி: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், பெரம்பாக்கம் கிராமத்தில், நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். அதற்கான விதிமுறைகள் அனைத்தும் பூர்த்தியாகி உள்ளன.

அமைச்சர் செங்கோட்டையன்: இந்த ஆண்டு பரிசீலிக்கப்படும்.

முஸ்லிம் லீக் - அபூபக்கர்: கடையநல்லுார் தொகுதி, சுந்தரேசபுரம் பள்ளி கட்டடம், மிகவும் பழுதடைந்துள்ளது; அதை சீரமைக்க வேண்டும். கிராம பள்ளிகளை, தரம் உயர்த்த வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: நடவடிக்கை எடுக்கப்படும்.