நீதிபதிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தமிழக நீதித்துறையில் பணியாற்ற 31 மாவட்ட நீதிபதிகளுக்கான எழுத்து தேர்வை நடத்த இருக்கிறது. இந்த எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (பி ப்ரவரி) 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்-லைன் மூலம் இதை விண்ணப்பிக்க வேண்டும்.


இதற்கான தேர்வு கட்டணத்தை அடுத்த மாதம் 6-ந் தேதிக்குள் வங்கி மூலம் செலுத்த வேண்டும். மாவட்ட நீதிபதிகளுக்கான முதல்நிலை தேர்வு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெறுபவர்கள் அடுத்தக்கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வை எழுதலாம்.

முதன்மை தேர்வு மே மாதம் 25, 26-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த 2 தேர்வுகளிலும் வெற்றிபெறுபவர்கள் ஜூன் மாதம் 4-வது வாரத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

டி.என்.பி.எஸ்.சி.யால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 31 மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கு மனிதநேய அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகம், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம், சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கம் மற்றும் பார்கவுன்சில் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) இணைந்து பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

இதில் நீதிபதிகள், மூத்த வக்கீல்கள், பயிற்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வரும் சிறந்த வக்கீல்கள் பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கின்றனர். இந்த பயிற்சி வகுப்புகள் சென்னை பார்கவுன்சில் ஆடிட்டோரியத்தில் நடத்தப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் 19-ந் தேதி (நேற்று) முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை, எண்.28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-35 என்ற முகவரியில் அமைந்துள்ள மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்தில் மார்பளவு புகைப்படத்துடன் நேரிலோ, 044-24358373, 24330952, 8428431107 என்ற தொலைபேசி எண்ணிலோ, admission.mntfreeias@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்யலாம்.

அதேபோல், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம், சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்கம் ஆகியவற்றிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை சென்னை ஐகோர்ட்டு பெண் வக்கீல்கள் சங்க தலைவர் நளினி, மனிதநேய மைய இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இந்த தகவலை மனிதநேய மையத்தின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks