குளிர் குறையும்; வெயில் கூடும்!

சென்னை, 'வரும் நாட்களில், பனி மூட்டம் குறையத் துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால்,
மழைக்கு பதிலாக, கடுமையான குளிர் காலம் துவங்கியது. நவம்பர் மூன்றாவது வாரத்தில் துவங்கிய பனி, ஒன்றரை மாதங்களாக நீடிக்கிறது.இந்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கான முன் அறிவிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், 'வரும் நாட்களில், தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், வெப்பநிலை உயரும்; பகலில் வறண்ட வானிலை நிலவும்' என்று கூறப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 'வரும் ஐந்து நாட்களுக்கு, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், பகல் நேர வெப்பநிலை கூடும்; இரவிலும், அதிகாலையிலும், பனி மூட்டம் இருக்கும். மூடுபனியின் அளவு படிப்படியாக குறையும்' என, கூறப்பட்டுஉள்ளது.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தின் எந்த இடத்திலும், மழை பெய்யவில்லை. நள்ளிரவு மற்றும் அதிகாலை பனியின் அளவு, வால்பாறை, ஊட்டியில் அதிகமாக இருந்தது. அங்கு வெறும், 5 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே, வெப்ப நிலை பதிவானது.பகல் நேர வெப்ப நிலையை பொறுத்தவரை, மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தி மற்றும் சேலத்தில், 33 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், 32; தொண்டி, திருத்தணி, பரங்கிபேட்டை, தர்மபுரி, கோவை, திருச்சி, 31; வேலுார், துாத்துக்குடி, தஞ்சை, புதுச்சேரி, பாளையங்கோட்டை, அதிராம்பட்டினம், 30; சென்னை, நாகை, பாம்பன், 29 டிகிரி செல்ஷியஸ் என, வெப்ப நிலை காணப்பட்டது.