வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம், 'கட்' : அரசு ஊழியர்களுக்கு கிரிஜா எச்சரிக்கை

சென்னை: 'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், சம்பளம் கிடையாது' என, தமிழக அரசின் தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் கள்
சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், இன்று முதல், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் துவங்குகிறது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 'ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, 21 மாத ஊதிய உயர்வு நிலுவையை வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்குகின்றனர்.இது தொடர்பாக, அனைத்து துறை செயலர்களுக்கும், மாவட்ட கலெக்டர் களுக்கும், தலைமைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன், கடிதம் அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:அரசு பணிகள் பாதிக்கும் வகையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது, நன்னடத்தை விதிகளை மீறுவதாகும். எனவே, இன்று வேலைக்கு வராமல், போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு, சம்பளம், விடுப்பு அளிக்கப்படாது.போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, மருத்துவ விடுப்பு தவிர, வேறு விடுப்பு வழங்கக் கூடாது. உரிய ஆவணங்கள் இல்லாமல், மருத்துவ விடுப்பும் வழங்கக் கூடாது. பகுதி நேரப் பணியாளர்கள், தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர், போராட்டத்தில் பங்கேற்றால், பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.அனைத்து துறை தலைவர்களும், வேலைநிறுத்தம் முடியும் வரை, தினமும் காலை, 10:15 மணிக்குள், ஊழியர்கள் வருகை குறித்த விபரங்களை, தலைமை செயலகத்திற்கு அனுப்ப வேண்டும். அதேபோல், வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் பட்டியலை, தனியே, பகல், 12:00 மணிக்குள், அனுப்ப வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.பங்கேற்காத சங்கங்கள்!தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம், அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர் மாநில மைய சங்கம், அரசு அலுவலர்கள் கழகம், 'சி மற்றும் டி' பிரிவு ஆகிய, அரசின் அங்கீகாரம் பெற்ற சங்கங்களின் பிரதிநிதிகள், நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து பேசினர்.அவர்கள், இன்று ஜாக்டோ - ஜியோ நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று, உறுதிமொழி அளித்தனர்.போராட்டத்துக்கு தடை கோரி வழக்கு'ஜாக்டோ - ஜியோ' நடத்தும் போராட்டத்துக்கு, தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.சென்னையை சேர்ந்த, பிளஸ் ௧ மாணவன் கோகுல் சார்பில், அவரது தந்தை, ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்த மனு:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், காலவரையற்ற போராட்டத்தில், ஜாக்டோ - ஜியோ ஈடுபடுகிறது. மார்ச் மாதம், பிளஸ் 1, பிளஸ் ௨ மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடக்க உள்ளன. பிப்., ௬ம் தேதி, செய்முறைத் தேர்வு துவங்க உள்ளது.மாணவர்களின் எதிர்காலத்தை, பொதுத் தேர்வுகள் தான் முடிவு செய்கின்றன. இந்நிலையில், காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டால், மாணவர்கள் பாதிக்கப்படுவர். இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து, அரசுக்கு அளித்த மனுவை பரிசீலிக்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.நேற்று பகல், நீதிபதி, டி.ராஜாவிடம், மனுவை அவசரமாக விசாரிக்கும்படி, வழக்கறிஞர் நவீன் கோரினார். ஜாக்டோ - ஜியோ சார்பில், வழக்கறிஞர், என்.ஜி.ஆர்.பிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை, இன்று விசாரிப்பதாக, நீதிபதி ராஜா தெரிவித்தார்.