பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: நிதித்துறை செயலர் விளக்கம்

சென்னை: 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கான வட்டி, முறையாக, அவர்களின்
கணக்கில் வரவு வைக்கப்படுகிறது' என, தமிழக அரசின் நிதித்துறை செயலர், சண்முகம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி பராமரிப்பு குறித்து, பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அது குறித்த உண்மை நிலையை விளக்க வேண்டியது அவசியமாகிறது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், 2003ல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பளத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதற்கு ஈடாக, 10 சதவீதம் தொகையை, அரசு வழங்குகிறது.இந்த தொகைகளை, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை நிறுவனத்திற்கு மாற்றம் செய்ய, முடிவெடுக்காத நிலையில், தனி பொது கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது. இந்த நிதி, அவ்வப்போது, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும், கருவூல பத்திரங்களில், முதலீடு செய்யப்படுகிறது.சேம நல வைப்பு நிதி வட்டி விகிதத்தின்படி, வட்டி கணக்கிடப்படுகிறது. அந்த தொகைக்கும், கருவூல பத்திர வட்டிக்கும் உள்ள, வித்தியாச தொகையை, மாநில அரசு வழங்கி, பொது கணக்கு நிதியில் சேர்க்கப்படுகிறது.இவ்வகையில், 2017 - 18 வரை, 2,115.47 கோடி ரூபாய், கூடுதல் வட்டியை, அரசு வழங்கியுள்ளது. பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ஈடாக, அரசின் பங்களிப்பு தொகை மற்றும் வட்டித் தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா என்பது, மத்திய கணக்கு ஆய்வாளரால் சரிபார்க்கப்படுகிறது.கடந்த, 2018 மார்ச், 31 வரை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்களிப்பு, 8,284 கோடி ரூபாய்; அரசின் பங்களிப்பு தொகை, 8,284 ரூபாய்; பெறப்பட்ட வட்டி, 5,253 கோடி ரூபாய் என, மொத்தம், 21 ஆயிரத்து, 821 கோடி ரூபாய், பொதுக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு, முறையாக பராமரிக்கப்படுகிறது.ஒவ்வொரு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கணக்கிலும், அவர்களின் பங்களிப்பு தொகை எவ்வளவு, அரசு அதற்கு ஈடாக செலுத்திய தொகை, வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு, முறையாக கணக்கு பராமரிக்கப்படுகிறது.அந்த விபரத்தை, சம்பந்தப்பட்ட ஊழியர்கள், cps.tn.gov.in/public/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த நிதி, தனி பொதுக்கணக்கில், வட்டியுடன் பராமரிக்கப்படுகிறது.எனவே, பிடித்தம் செய்யப்பட்ட நிதி, முறையாக பராமரிக்கப்படுவதுடன், அதற்கான வட்டி, சேமநல நிதிக்கு கிடைக்கும் வட்டி அளவான, 8 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களின் கணக்கில், வரவு வைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.