'மொபைல் ஆப்' வருகை பதிவு பள்ளி கூரையில் ஏறிய ஆசிரியர்

சென்னை:வருகை பதிவு செயலியை இயக்க, மொபைல் போன் சிக்னலுக்காக, ஆசிரியர் ஒருவர் பள்ளியின் மேற்கூரையில் ஏறி நிற்கும் காட்சி, 'வாட்ஸ் ஆப்'பில் வலம் வருகிறது.


தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, சமக்ர சிக் ஷா திட்ட இயக்குனரகம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் வருகை பதிவை மேற்கொள்ள, 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் காலையில், மொபைல் போன் செயலியில், மாணவர்களின் வருகையை பதிவு செய்து, அதை அறிக்கையாக, அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊராட்சி பகுதிகள் மற்றும் மலை பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மொபைல் போன் சிக்னல் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், வருகைப்பதிவு செயலியை செயல்படுத்த முடியவில்லை என, ஆசிரியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், ஆசிரியர் ஒருவர், பள்ளி மேற்கூரையில் ஏறி, செயலியை இயக்கும் புகைப்படம், 'வாட்ஸ் ஆப்'பில் வெளியாகி உள்ளது.

நாகை மாவட்டம், நரிமணம் ஊராட்சி பள்ளியில், ஆசிரியர் திருவருட்செல்வம் என்பவர், பள்ளி கட்டடத்தின் மேற்கூரைக்கு ஏறி, அங்கிருந்து, மொபைல் போன் செயலியில், மாணவர் வருகையை பதிவு செய்துள்ளார்.