தொழிற்கல்விக்கு மாறிய மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல்

பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த 28
ஆயிரம் பேரில் பலர் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,க்கு மாறியதால், அவர்களை பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.


கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் தனித்தேர்வர்களை தவிர்த்து 8.47 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 7.74 லட்சம் பேர் தேர்ச்சி, 73 ஆயிரத்து 800 பேர் தோல்வி அடைந்தனர். தோல்வி அடைந்தவர்களும் தொடர்ந்து பிளஸ் 2 படிக்க கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் பல பள்ளிகள் பின்பற்றவில்லை. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலில் 28 ஆயிரத்து 167 பேர் விடுபட்டனர். அவர்களை பள்ளிகளில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றியது தெரிந்தது.


இதையடுத்து, 'அனைவரையும் பள்ளி மாணவர்களாகவே பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வை எழுத வைக்க வேண்டும்' என தேர்வுத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் வெளியேறிய மாணவர்களில் சிலர் தனித்தேர்வர்களாகவும் மாறிவிட்டனர். பலர் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,யில் சேர்ந்துள்ளனர். சிலர் வேலை செய்கின்றனர்.


இதில் தனித்தேர்வர்களையும், வேலைக்கு சென்றோரையும் அழைத்து பள்ளிகள் மூலம் தேர்வு எழுத வைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., யில் படிப்போரை தேர்வு எழுது வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அவர்களை பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பது குறித்து தேர்வுத்துறைதான் முடிவு செய்ய வேண்டும்' என்றார். 

SOURCE:DINAMALAR