மத்திய அரசு பணிகளில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 10% இட ஒதுக்கீடு அமல்

புது தில்லி: மத்திய அரசு பணிகளில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 10% இட ஒதுக்கீடு அமல் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேறியது. பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அது அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
இந்த இட ஒதுக்கீட்டை நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத் அரசு அமல்படுத்தியது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும், உயர் கல்வி நிறுவனங்களும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு பணிகளில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 10% இட ஒதுக்கீடு அமல் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் நலத்துறை வியாழனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், 'பிப்ரவரி 1-ம் தேதி முதல் பணிகளில் ஆட்சேர்ப்பு நடைபெறும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.