பிளாஸ்டிக் தடை

சென்னை:எந்த வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, 'டாஸ்மாக்' பார் உரிமையாளர்களுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆலோசனைகள் வழங்கினர்.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர், மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. அந்த கடைகளை ஒட்டி, தனியார், பார்கள் நடத்த அனுமதி வழங்கப் படுகிறது. அவற்றில், பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், குளிர்பானங்கள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.
வரும் ஜனவரி முதல், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு, தமிழக அரசு, தடை விதித்துள்ளது. அதற்கு, சில நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இருப்பினும், பார்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ளது.இந்நிலையில், சென்னையில் உள்ள மது கடைகளில், பார் நடத்துவோரிடம், பிளாஸ்டிக் குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நேற்று ஆலோசனைகள் வழங்கினர். அதில், டாஸ்மாக் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'பார்களில், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் டம்ளர், உணவு பொருட்கள் வைத்து தரப்படும் பிளாஸ்டிக் பேப்பர்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது; அதற்கு மாற்றாக, கண்ணாடி, எவர்சில்வர் டம்ளர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தும்படி, ஆலோசனைகள் வழங்கப்பட்டன' என்றார்.