ரெடிட் கார்டு பயன்பாட்டில் உள்ள இடர்களை கையாள்வது எப்படி?

இந்தியர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியாகியுள்ள டிரான்ஸ் யூனியன் சிபில் அறிக்கை, இந்தியர்கள், 3.69 கோடி கிரெடிட்
கார்டு கணக்கு பெற்றிருப்பதாக தெரிவிக்கிறது. அதே போல, கிரெடிட் கார்டு பாக்கித்தொகையை செலுத்தாமல் நிலுவையில் கொண்டு செல்வதும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையை தவிர்ப்பதற்கான வழிகள்:

அதிகப்படியான செலவு :
கிரெடிட் கார்டு பயன்பாடு வசதியானது, பல அனுகூலங்கள் கொண்டது என்றாலும், அதில் இடர்களும் அதிகம். கிரெடிட் கார்டை சரியாக நிர்வகிக்காமல், இஷ்டம் போல பயன்படுத்தினால், அளவுக்கு அதிகமாக செலவு செய்ய நேரலாம். எனவே, மாத அடிப்படையில் திருப்பி செலுத்தக்கூடிய தொகைக்கு மட்டும் கார்டை பயன்படுத்துவது நல்லது.

கடன் சுமை :
பொதுவாக கிரெடிட் கார்டு பயனாளிகளால் கார்டு பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இது மாதாந்திர பில்லில் வெளிப்படலாம். இதனால், பகுதி அளவு தொகையை செலுத்தி, சுழலும் கடன் முறைக்கு நிர்ப்பந்திக்கலாம். இதனால் கடன் சுமை அதிகமாகும். சுழலும் கடனை தவிர்க்கும் உறுதி வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு :
கிரெடிட் கார்டு தொகையை நிலுவையில் வைக்கும் வழக்கம் கொண்டிருந்தால் கடன் சுமை அதிகரிப்பது மட்டும் அல்ல, கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படும். முறையாக செலுத்தப்படாத பில் தொகை கிரெடிட் ஸ்கோரை குறைக்கும். எனவே, உரிய காலத்தில் பில் தொகையை செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

பயன்பாட்டு விகிதம் :

கிரெடிட் கார்டுக்கு கடன் வரம்பு உண்டு. இந்த வரம்பில் பயன்படுத்தப்படும் தொகை கடன் பயன்பாடு விகிதம் என குறிப்பிடப்படுகிறது. இந்த விகிதம் அதிகமாக இருப்பது ஏற்றது அல்ல. இந்த விகிதம், 40 சதவீதத்திற்கு மேல் இருந்தால் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். கடன் பயன்பாட்டு விகிதத்தில் கவனம் தேவை.

கார்டுகள் பலவிதம் :
வழக்கமான கிரெடிட் கார்டுகளுடன் குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான கோ பிராண்டட் கார்டுகளும் வழங்கப்படுகின்றன. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் நிலை வரலாம். இதனால், அளவுக்கு அதிகமாக செலவு செய்யும் வாய்ப்பு உண்டு. தேவை இல்லாத கார்டுகளை ரத்து செய்துவிடலாம்.