ஊதிய உயர்வுக்கோரி சென்னையில் போராட்டம்!! இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுப்பு !!

தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2009-ம் ஆண்டு மே 31-ந் தேதி முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ந்தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு காணப்படுகிறது.


எனவே ‘சமவேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர்கள் இயக்கத்தின் நிர்வாகிகளிடம் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு அன்றையதினம் மாலை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். போலீசார் அவர்களை கைது செய்து, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைத்தனர். சில ஆசிரியர்கள் குழந்தைகளையும் உடன் அழைத்து வந்ததால், அவர்கள் கடும் குளிரிலும், கொசுக்கடியாலும் அவதிப்பட்டனர்.

இந்தநிலையில் இடைநிலை ஆசிரியர்கள் ராஜரத்தினம் மைதானத்தில் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை நேற்று 2-வது நாளாக தொடர்ந்தனர். அப்போது 30 ஆசிரியர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

போராட்டம் குறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறியதாவது:-

2009-ம் ஆண்டு மே மாதம் நாங்கள் பணிக்கு சேர்ந்த போது ரூ.9,450 சம்பளம் கிடைத்தது. தற்போது ரூ.23 ஆயிரம் வாங்குகிறோம். 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் பணிக்கு சேர்க்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் எங்களை விட இரு மடங்கு சம்பளம் பெறுகிறார்கள்.

ஒரே கல்விதகுதி, ஒரே பணியில் உள்ள இந்த ஊதிய முரண்பாட்டால் 21 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 500 ஆசிரியைகள் உள்பட 1,400 பேருக்கு போலீசார் உணவு ஏற்பாடு செய்த னர். ஆனால் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். குழந்தைகளுக்கு மட்டும் உணவு வாங்கி கொடுத்தனர்.

இந்தநிலையில் நேற்றிரவு 7 மணியளவில் இடைநிலை ஆசிரியர்களை ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து போலீசார் விடுவித்தனர். முதலில் வெளியேற மறுத்த ஆசிரியர்கள் பின்னர் டி.பி.ஐ. வளாகம் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இரவு அங்கு சென்ற அனைவரும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தை தொடருவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அரையாண்டு தேர்வுகள் முடிந்து தற்போது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் மாணவர்கள் எழுதிய விடைத்தாளை ஆசிரியர்கள் திருத்தம் செய்வார்கள்.

தற்போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால், குறிப்பிட்ட மாணவர்களுடைய விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.