தென் மாவட்டங்களில் நாளை கனமழை?

சென்னை, :தென் மாவட்டங்களின் சில இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, கணிக்கப்பட்டுள்ளது.'பெய்ட்டி' புயல் ஏமாற்றியதால், தமிழகத்தில்
வடகிழக்கு பருவமழையில், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டிச., 6 முதல், மாநிலம் முழுவதும் மழை இன்றி, நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது.இந்நிலையில், வங்க கடலில், தென் கிழக்கு பகுதியில், இலங்கைக்கு கிழக்கே, காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி, தமிழக தென் மாவட்டங்களுக்கு நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளின் சில இடங்களில், நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில் எந்த இடத்திலும் மழை பெய்யவில்லை. நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் மாவட்டம், பரமத்தியில், 33.5 டிகிரி செல்ஷியஸ், குறைந்தபட்சமாக, கொடைக்கானலில், 18.1 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில், 29.4 மற்றும், விமான நிலையத்தில், 29.1 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.