இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி-4 ஆம் தேதி வெளியாகாது: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு

சென்னை: முன்னரே அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி-4 ஆம் தேதி வெளியாகாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகமெங்கும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் பணிகளுக்காக சிறப்பு முகாம்களை மாநில தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது. அதன் முடிவில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னரே அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி-4 ஆம் தேதி வெளியாகாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுள்ளார்கள்.
அவற்றில் எது சரியானது என்பதைக் கண்டறிந்து களைவது தேர்தலை ஆணையத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.
வாக்காளர் பட்டியல் ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு என தனியான இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சரிபார்ப்பு பணிகளில் எளிதாக செயல்பட முடியும்.
முன்னரே அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி-4 ஆம் தேதி வெளியாகாது.
எனவே கூடுதல் அவகாசம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத உள்ளோம்.