2ம் வகுப்பு மாணவனை அடித்த தலைமையாசிரியை, 'சஸ்பெண்ட்'

சேலம்: சேலம் மாவட்டத்தில், அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில், 2ம் வகுப்பு மாணவனை அடித்த, தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம்,
இடங்கணசாலை அருகே, ராசிக்கவுண்டனுாரில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, கருணாமூர்த்தி, 7, என்ற மாணவன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். பள்ளி வளாகத்தில், கருணாமூர்த்தி குப்பை போட்டதால், அதை கண்டித்த தலைமையாசிரியை சாந்தி, மூங்கில் பிரம்பால், கை, கால், முதுகு என, பல இடங்களில் அடித்ததில் உடலில் நடுக்கம் ஏற்பட்டது.தற்போது கருணாமூர்த்தி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது தொடர்பாக விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியை, சாந்தியை நேரடியாக அழைத்து, 'சஸ்பெண்ட்' உத்தரவை நேற்று வழங்கினர்.இது குறித்து, சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர், ராமசாமி கூறியதாவது:சிறு குழந்தைகள் தவறு செய்வது இயற்கை. ஆசிரியர்கள் உணர்ச்சி வசப்படாமல், நடந்து கொள்ள வேண்டும். அரசு விதிகளை, ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். மாணவர்களிடம் அன்பாக பேசி அவர்களை திருத்த வேண்டும்; கடுமையாக தண்டிக்கக் கூடாது. மீண்டும் மீண்டும் தவறு செய்தால், பெற்றோரை அழைத்து, அவர்கள் மூலம், மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.