திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்: தீபக் கொப்பரை மலைக்குப் பயணம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 23) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகா தீபக் கொப்பரை வியாழக்கிழமை மலை மீது கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர்.
அதன்படி, நிகழாண்டுக்கான தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது 5 அடி உயரம், 40 அங்குலம் விட்டத்துடன் 200 கிலோ எடை கொண்ட மகா தீபக் கொப்பரையில் மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.
சிறப்புப் பூஜை: மகா தீபக் கொப்பரைக்கு வியாழக்கிழமை அதிகாலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பிறகு, கோயில் கோமாதா மகா தீபக் கொப்பரையை வணங்கியது. பூஜையில் கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொப்பரை மலைக்குப் பயணம்: இதன்பிறகு, கோயிலில் இருந்து அம்மணி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியாக மலையேறும் பாதைக்கு மகா தீபக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாலை 5.30 மணிக்குப் பிறகு 2,668 அடி உயர மலை மீது மகா தீபக் கொப்பரை கொண்டு சென்று வைக்கப்பட்டது. பர்வதராஜ குல வம்சத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் கொப்பரையை மலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர். கொப்பரையுடன் தீபம் ஏற்றப் பயன்படும் நெய் சேகரிக்கும் அகண்டமும் கொண்டு செல்லப்பட்டது.
மலை மீது வைக்கப்பட்டுள்ள மகா தீபக் கொப்பரைக்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொப்பரையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.