வருமான வரியில் கல்வி கட்டண விலக்கு கூடாது : மத்திய அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை

'தனியார் பள்ளிகளில், குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோருக்கு, வருமான வரியில், கல்வி கட்டண விலக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும்' என, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்துக்கு, வருமானவரி துறை அதிகாரிகள் பரிந்துரைத்து உள்ளனர்.கடந்த ஆண்டு முதல், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்த, வருமான வரி துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். 


நடப்பு நிதியாண்டு முதல், மாத ஊதியம், மாத ஓய்வூதியம், என, வருமானவரி உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.கட்டாயம்வருமான வரியை குறைக்க, வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உச்சவரம்புக்கு கீழ் வருமானம் இருந்தாலும், இந்த ஆண்டு, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாகி உள்ளது.இந்நிலையில், தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு, கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிப்பதை நிறுத்த, மத்திய அரசுக்கு, அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதுகுறித்து, வருமானவரி அதிகாரிகள் கூறியதாவது:அலகாபாத் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில், 'அரசு பள்ளிகளில், ஏழை மாணவர்கள் மட்டும் படிப்பதால், அவற்றின் தரம் பின்தங்கி உள்ளது. 'வசதி மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் பிள்ளை களும், அரசு பள்ளிக்கு வந்தால், அவற்றின் தரம் மேம்படும்' என, தெரிவித்துள்ளது.எனவே, அரசுக் கருவூலத்தில் ஊதியம் பெறும் அனைவரும், தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். 'தனியார் பள்ளியில் சேர்த்தால், அங்கு செலுத்தும் கட்டணத்தை, அரசுக்கு அபராதமாக செலுத்த வேண்டும். இந்த தீர்ப்பு, நீதிபதிகளுக்கும் பொருந்தும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.கடிதம்இந்த தீர்ப்பின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில், குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோருக்கு, வருமான வரியிலிருந்து, கல்விக் கட்டணத்துக்கு விலக்கு அளிக்கப்பதை நிறுத்த வேண்டும் என, கடிதம் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.