தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடையாது: உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

வினாத்தாள் மொழி பெயர்ப்பு குளறுபடி வழக்கில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்குவதாக எடுக்கப்பட்ட முடிவு
ஆராயாமல் எடுக்கப்பட்டது என்று கூறி உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
நீட் தேர்வு வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்ததில் 49 கேள்விகளில் தவறு இருந்துள்ளது. இதனால், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போப்டே மற்றும் நாகேஷ்வர ராவ் அடங்கிய அமர்வு இன்று உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பு வெளியிட்டது. அப்போது, அவர்கள் கூறியது,
"மொழி பெயர்பில் ஏற்பட்ட தவறை மாணவர்கள் கண்டுபிடித்து தவிர்த்திருக்கவேண்டும். அதற்காக அந்த 49 கேள்விகளுக்கு தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அளித்த பதிலை கருத்தில் கொள்ளாமல் மாணவர்கள் அனைவருக்கும் முழு மதிப்பெண்களை வழங்குவது நியாயமற்றது. அதன் விளைவும் அதற்கு நிகராக நியாமற்றது.
நீட் தேர்வை தமிழில் தேர்ந்தெடுத்ததன் ஒரே காரணத்துக்காக அவர்கள் பலன் பெறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதில், ஒரு சில மாணவர்கள் தோல்வியடைந்திருக்கலாம். இந்த கருணை மதிப்பெண்கள் வழங்குவதன் மூலம், தோல்வியடைந்த மாணவர் ஒருவர் ஆங்கிலம் மற்றும் மற்ற மொழிகளில் தேர்வு எழுதிய ஒரு மாணவரைவிட அதிகமான மதிப்பெண்ணை பெறலாம்.
தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்களா என்பதை ஆராய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் அந்த 49 கேள்விகளுக்கு முழு மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் இதனை பகிரங்கமாக மனம்போன போக்கில் கையாண்டுள்ளது. அது நியாயமற்றது. மேலும் நீடிக்கவும் கூடாது.
பிராந்திய மொழிகளில் வினாத்தாள் மொழிபெயர்பை சரியாக செய்யவேண்டும். வரும் ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்கு உறுதியளிக்கும் வகையில், அரசு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்" என்றனர்.