டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை, :வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி வரையிலான கடலோர மாவட்டங்களில், இன்று பரவலாக, மழைக்கு
வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய துணை பொது இயக்குனர், பாலச்சந்திரன் பேட்டி:வடகிழக்கு பருவமழை காலம் தற்போது நிலவுவதால், அவ்வப்போது காற்றின் சுழற்சிக்கு ஏற்ப, சில இடங்களில் திடீர் மழை பெய்யும். மாலத்தீவு அருகே, வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. வங்க கடலில், தென் மாவட்டங்களின் அருகே, காற்றழுத்த தாழ்வு நிலையும் நிலவுகிறது.

இதன் காரணமாக, தெற்கு கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலுார்,புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில், லேசான மழை பெய்யலாம். அக்., 1 முதல், நேற்று வரை, தமிழகம், புதுச்சேரியில், 31 சதவீதம் மழை பெய்துள்ளது. இது, இயல்பை விட, 4 சதவீதம் குறைவு.இவ்வாறு அவர் கூறினார்.