திருவாரூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கொடைக்கானல் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

திருவாரூர்: திருவாரூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கொடைக்கானல் பள்ளிகளுக்கு நாளை திங்கள்கிழமை (நவ.19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயலை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளி ஆசிரியர்கள் நாளை கண்டிப்பாக பள்ளிகளுக்கு வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்தும், ஆசிரியர்கள் நாளை கண்டிப்பாக பள்ளிகளுக்கு வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓரத்த நாடு, பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டு மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை: கஜா புயலால் மாவட்டத்தில் எதிர்பாராத அளவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தும், மயிலாடுதுறை கோட்டத்தில் பாதிப்பை பொறுத்து விடுமுறை அளிக்க பள்ளி தலைமையாசிரியர் முடிவு எடுக்கலாம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கொடைக்கானல்: புயல் பாதிப்பை தொடர்ந்து நிவாரணப்பணிகள் நடப்பதால் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் வினய் உத்தரவிடப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: கஜா புயல் காரணமாக ஏற்கெனவே கடந்த வியாழன், வெள்ளி மற்றும் சனி, ஆகிய 3 நாட்கள் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை மனதில் கொண்டு, 2, 3 மற்றும் 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்காக நாளை நடைபெறவிருந்து தேர்வுகள், வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, எம்.ஐ.டி., கட்டிடக்கலைப் பள்ளி ஆகியவற்றிற்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தவாறு, தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு: கஜா புயல் பாதிப்பை அடுத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் நவ.26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.