ஜாக்டோ ஜியோ போராட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படுமா ?

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தை, மீண்டும் ரத்து செய்ய, ஆசிரியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.ஆறாவது ஊதிய குழு பரிந்துரைப்படி, 21 மாத சம்பள நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்துகின்றனர்.


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை, அமல்படுத்த வேண்டும்; அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து, அனைவருக்கும் சரியான ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும், இவற்றில் அடங்கும்.இதுகுறித்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினரின், ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பாக, 27ம் தேதி முதல், தொடர் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, போராட்ட தேதி, டிச., 4ம் தேதிக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து, ஆய்வு செய்த, ஸ்ரீதர் குழு, நேற்று அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில், ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.மேலும், 'கஜா' புயல் பாதிப்பால், டெல்டா மாவட்டங்களில், சீரமைப்பு பணிகள் நடப்பதால், அந்த மாவட்டத்தின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


எனவே, தற்போது போராட்டம் நடத்த வேண்டாம் என, பல்வேறு தரப்பிலும், சங்கங்களுக்கு கோரிக்கைகள் வந்தன. எனவே, வரும், 4ம் தேதி போராட்டத்தை, ரத்து செய்ய, ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, உயர்மட்ட குழு கூடி, முறையான அறிவிப்பை வெளியிடும் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.ஸ்டாலின் வேண்டுகோள்!தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை:நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர், போராட்டங்கள் நடத்தியும், அரசு, அதை காதில் வாங்கவில்லை. அரசின் அலட்சியம் காரணமாக, டிச., 4 முதல், காலவரையற்ற போராட்டம் நடத்தப் போவதாக, ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.இந்த அறவழி போராட்டம், முழுக்க முழுக்க நியாயமானது என்றாலும், புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மக்களுக்கான பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது.

எனவே, இந்த போராட்டத்தை, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒத்திவைக்க வேண்டும்.போராடினாலும், இந்த அரசு திருந்தப் போவதில்லை. இந்த பிரச்னைகளுக்கு, ஆட்சி மாற்றம் மட்டுமே, ஜனநாயக வழியாகும். எனவே, தி.மு.க., ஆட்சி அமையும் வாய்ப்பு கிடைத்ததும், நியாயமான கோரிக்கைகள் குறித்து, கலந்து பேசி நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.