வங்கக்கடலில் உருவானது 'கஜா' புயல்

அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில்
நிலவுகிறது. இது 2 நாளில் புயலாக வலுவடையவுள்ளது.
தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலையக தீபகற்ப பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கடந்த 8-ஆம் தேதி உருவாகியது. இது தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை நிலவியது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி சனிக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும், இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஞாயிற்றுக்கிழமை புயலாக மாறியது. இதற்கு கஜா புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இது அடுத்த 2அல்லது 3 நாட்களில் தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 15-ஆம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முன்னதாக, புயல் எச்சரிக்கையையடுத்து தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், கடலூர், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் சனிக்கிழமை ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.