புயல் பாதிப்பு: மத்திய குழு நாளை தமிழகம் வருகை

சென்னை: கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் நாளை(நவ.,23) மாலை தமிழகம் வர உள்ளனர்.


சமீபத்தில் வீசிய கஜா புயல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து கிடக்கின்றன. மீட்பு பணிகளும் மந்தமாக நடக்கின்றன. புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, இன்று(நவ.,22) டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து புயல் பாதிப்புகள் குறித்து விளக்கினார். மேலும், பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் நாளை(நவ.,23) மாலை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரை சந்தித்த பின்னர் இந்த குழுவின் பணிகள் துவங்கும். குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் மற்றும் அதிகாரிகள் நவ.25, 26 ல் புயல் பாதித்த டெல்டா பகுதியில் ஆய்வு செய்கின்றனர். நவ.27 ல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.

அ.தி.மு.க, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஒரு மாத நிதி


அ.தி.மு.க., எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை காஜாபுயல் நிதியாக தர உள்ளனர் என முதல்வர் பழனிசாமி கூறி உள்ளார். மேலும் அவர் கூறியதாவது: நாளை வரும் மத்தியகுழுவினர் 3 நாட்கள் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பிரதமரிடம் காண்பித்து நிதி கோரப்பட்டுள்ளது. தமிழக அரசு கோரப்பட்டுள்ள நிதி முழுமையாக கிடைக்கும் என கூறினார்.