சென்னையை நோக்கி புதிய புயல் சின்னம்: மழை பொழியுமா, புஸ்வாணம் ஆகுமா?

தென் மாவட்டங்களுக்கு மழை கொட்டிஉள்ள நிலையில், சென்னையை நோக்கி, புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், நவ., 1ல் வட கிழக்கு பருவமழை துவங்கியதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்னையில் இரண்டு நாட்கள் மட்டும் லேசான மழை பெய்த நிலையில், தென் மாவட்டங்களில் அதிகம் பெய்துள்ளது. ஒரு வாரத்தில், அதிகபட்சமாக, மணிமுத்தாறில், 29 செ.மீ., மழை கொட்டியது.இதையடுத்து, தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
ஆனால், வடக்கு மற்றும் வடகிழக்கு கடலோர மாவட்டங்களில், மழைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களுக்கு எப்போது மழை வரும் என, பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், சென்னையை நோக்கி புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தென் சீன கடல் மற்றும் தாய்லாந்து இடையே, வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வலுப்பெற்று வருவதால், நாளைக்குள் அந்தமான் தீவுகளுக்கு தென் கிழக்கில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று, வங்க கடல் வழியே, மேற்கு அல்லது வட மேற்கு திசையை நோக்கி பயணிக்கும் வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின், அதன் சரியான திசை மற்றும் வலுப்பெறும் நிலை குறித்து தெரியும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தனியார் வானிலை ஆய்வுகளின் அடிப்படையில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் சென்னை மற்றும் நெல்லுாருக்கு இடைப்பட்ட பகுதியை நோக்கி பயணிக்கும் என, தெரிகிறது. தற்போதைய சூழலில், காற்றழுத்த பகுதி, புயல் சின்னமாக உருவாகும் என்றாலும், கடலிலேயே வலுவிழந்து, 14, 15ம் தேதிகளில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், மிதமான மழையை கொடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மன்னார் வளைகுடா அருகே நிலை கொண்டுள்ள காற்ற ழுத்த தாழ்வு பகுதியால், தென் மாவட்டங்களில் எதிர்பார்த்ததை விட மழை குறைந்துள்ளது; இலங்கையில் மழை கொட்டியது.இன்று, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் துாத்துக்குடியின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, கணிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, ராமநாதபுரம், இரணியல் மற்றும் திருசெந்துாரில், தலா, 1 செ.மீ.. மழை பதிவானது.