காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை: சென்னை வானிலை மையம்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நேற்று தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே தென் மேற்கு பகுதியில் நீடித்து வருகிறது. இது மேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து நிலை கொள்ளும். அதே இடத்தில் கடற்கரையோரப் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரயில் பரவலாக பெரும்பான்மையான இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிகக் கன மழையும் பெய்யும். குறிப்பாக, காஞ்சிபுரம், புதுவை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 8 செ.மீ. மழையும், மணிமுத்தாறு பகுதியில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியைப் பொறுத்தவரை இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்யும். இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களைப் பொறுத்தவரை இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.