அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்த்த நடவடிக்கை

புதுச்சேரி:'தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்' என முதல்வர் நாராயணசாமி பேசினார்.புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில்,
அரியாங்குப்பம் ஏ.வி.ஆர்.கே. மகாலில் நடந்த குழந்தைகள் தின விழாவில், முதல்வர் நாராயணசாமி, பேசியதாவது;புதுச்சேரியில் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாநிலத்தின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்களை அழைத்து கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தோம். அப்போது, மாணவர்கள் - ஆசிரியர்கள் இடையே சரியான தொடர்பு இல்லை. என்பது தெரியவந்தது.அதையடுத்து, குழந்தைகளின் மனநிலையை உணர்ந்து கல்வி அளிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். மாநிலம் 100 சதவீதம் கல்வி பெற்றுள்ளது.புதுச்சேரி மாநில அரசு கல்லுாரிகள், அகில இந்திய பட்டிலில் இடம்பிடித்துள்ளன. மருத்துவம் பொறியியல் மட்டும் படிப்பு கிடையாது. பல துறைகளை தேர்வு செய்து மாணவர்கள் படிக்க பெற்றோர், ஆசிரியர்கள் ஆலோசனை வழங்க வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்க ஐ.டி. தொழில்நுட்ப பூங்கா, திறன்மேம்பாட்டு மையம் கொண்டுவரப்பட உள்ளது.நாட்டில் முதன்மையான மாநிலமாக புதுச்சேரியை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது பொறியியல் கல்லுாரியில் மாணவர் வகுப்பறையை பெற்றோர் நேரடியாக பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பள்ளி வகுப்பறையிலும் கொண்டுவருமாறு கூறியுள்ளேன். அப்போது தான் சிறந்த கல்வியை அளிக்க முடியும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.