பாட புத்தகம் தயாரிப்பு சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

'சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் புத்தகம் தயாரிக்க, எந்த நிறுவனத்துக்கும் அனுமதி அளிக்கவில்லை' என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, என்.சி.இ. ஆர்.டி.,யின் புத்தகங்களை மட்டுமே, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பயன்படுத்த வேண்டும் என, சி.பி.எஸ்.இ., உத்தர விட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., இணைப்பு அங்கீகாரம் தொடர்பாக, கடந்த வாரம் வெளியிடப்பட்ட புதிய விதிகளில், 'எந்த புத்தகத்தை பயன்படுத்தினாலும், அதில் உள்ள கருத்துகளை, முதலில் ஆய்வு செய்து கொள்ள வேண்டும். அதற்கு, அந்தந்த 
பள்ளிகளே பொறுப்பேற்க வேண்டும்.


'எனவே, தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்க, அனைத்து பள்ளிகளும், என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களையே பயன்படுத்த வேண்டும்' என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., தரப்பில், நேற்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதில், 'சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரை, எந்த வகுப்புக்கும், எந்த தனியார் நிறுவனத்துக்கும், புத்தகங்கள் தயாரிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.'எனவே, என்.சி.இ.ஆர்.டி., அல்லாத புத்தகங்களை, பள்ளிகள் வாங்கினால், அதற்கு, சி.பி.எஸ்.இ., பொறுப்பல்ல' என, கூறப்பட்டுள்ளது.