9 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

சென்னை, டெல்டா உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை பொது இயக்குனர், பாலச்சந்திரன் பேட்டி:வங்கக் கடலின் தென்மேற்கில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தமிழகம், புதுச்சேரியில், பரவலாக மழையை கொடுக்கும். காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலுார், நாகை, அரியலுார், திருவாரூர், தஞ்சாவூர், புதுச்சேரி, காரைக்காலில், பரவலாக மிதமான மழை பெய்யும். சில இடங்களில், கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகள், அதையொட்டிய தமிழக பகுதிகள், கர்நாடகாவின் தெற்கு பகுதிகளிலும், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சுழல் காற்று வீசும். கடலோர மாவட்டங்களில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.சென்னையில், அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த மண்டலம், புயலாக மாற வாய்ப்பில்லை. வங்க கடலில், அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, மீனவர்கள், இன்று வங்கக் கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிலையில், நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், செங்கோட்டையில், 8 செ.மீ., மழை பதிவானது. மணிமுத்தாறு, 6; பாம்பன், திருநெல்வேலி - பாபநாசம், திருச்செந்துார், ராமேஸ்வரம், 5; தென்காசி, காரைக்கால், அரிமளம், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, 4 செ.மீ., மழை பெய்தது.ஆய்க்குடி. திருவாரூர், அம்பாசமுத்திரம், ராதாபுரம், பரமக்குடி, 3; திருமயம், கோவில்பட்டி, பேரையூர், மதுராந்தகம், கும்பகோணம், திண்டுக்கல், திண்டிவனம், மற்றும் இளையான்குடியில் 2 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.