டிச., 6 வரை புயல் சின்னம் உருவாகாது; பரவலாக மழை பெய்யும்: வானிலை மையம் கணிப்பு

'இந்திய கடற்பகுதியில், டிச., 6 வரை, புதிய புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பில்லை' என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரள எல்லை பகுதிகளில், இன்று முதல் பரவலாக மழை பெய்யும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை, நவ., 1ல் துவங்கி, முதல் கட்ட மழைமுடிந்துள்ளது.

பற்றாக்குறை :
முதலில், மழை மிகவும் குறைவாக இருந்த நிலையில், வங்க கடலில் உருவான, கஜா புயலால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு, கூடுதல் மழை கிடைத்தது. இதனால், இயல்பான மழையில், 60 சதவீதமாக இருந்த பற்றாக்குறை, 45 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அறிவிக்கும், குறுகிய கால வானிலை முன் கணிப்புகளை, நேற்று வெளியிட்டுள்ளது. இதில், நவ., 23 முதல், டிச., 6 வரையிலான முன் கணிப்பு விபரம்:

இன்று முதல், 29ம் தேதி வரை, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், கனமழைக்கு வாய்ப்பில்லை. ஆனால், தமிழகம் மற்றும் கேரள எல்லை பகுதிகளில், இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில், மிதமான வெயில் இருக்கும். சில இடங்களில், லேசான மழை பெய்யும்.

திடீர் மழை :
நவ., 30 முதல் டிச., 6 வரை, புதிய புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பில்லை. பெரும்பாலான இடங்களில், திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சிகளால், இரவு நேரங்களில் திடீர் மழை பெய்யலாம். இவ்வாறு கணிப்பில், கூறப்பட்டுள்ளது.

மழை நிலவரம் :
நேற்று காலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, செங்கல்பட்டில், 18 செ.மீ., மழை பதிவானது. மதுராந்தகம், 14; மகாபலிபுரம், 10; உத்திரமேரூர், வந்தவாசி, 9; மரக்காணம், பரங்கிபேட்டை, வானுார், செஞ்சி, திண்டிவனம், 8 செ.மீ., மழை பதிவானது.

ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், ஆரணி, 7; அவினாசி, போளூர், கடலுார், சோழவரம், செங்குன்றம் 6; நெய்வேலி, ஆய்க்குடி, தாம்பரம், சீர்காழி, செய்யார், மணிமுத்தாறு, புதுச்சேரி, வேலுார், 5; சோழிங்கநல்லுார், அரக்கோணத்தில், 4 செ.மீ., மழை பெய்தது.நன்னிலம், புழல், திருப்பூர், பொன்னேரி, செய்யூர், சிதம்பரம், திருத்தணி, கோத்தகிரி, எண்ணுார், ஆம்பூர், 3; சென்னை மயிலாப்பூர், கோட்டூர்புரம், விமான நிலையம், 2; சென்னை நுங்கம்பாக்கம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை வல்லத்தில், தலா, 1 செ.மீ., மழை பதிவானது.

கனமழை எச்சரிக்கை நீக்கம் :
தமிழகத்தில், கஜா புயல் உருவானது முதல், தொடர்ந்து, 'ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட்' என, மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், கனமழை பெய்தது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, அரபி கடலில் நுழைந்து விட்டதால், தமிழகத்துக்கான மழை எச்சரிக்கை, வாபஸ் பெறப்பட்டுள்ளது.