டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு தாக்கம் 50 சதவீதம் குறைந்தது

தமிழகத்தில், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு, இந்தாண்டில் இதுவரை, 40 பேர்
உயிரிழந்துள்ளனர். அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில், நவம்பரில் காய்ச்சல் பாதிப்பு, 50 சதவீதம் குறைந்து உள்ளது.தமிழகத்தில், 2017ல், டெங்கு காய்ச்சலில், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டதில், 65 பேர் உயிரிழந்தனர். பன்றி காய்ச்சலுக்கு, 3,315 பேர் பாதிக்கப்பட்டதில், 17 பேர் உயிர்இழந்தனர். இந்தாண்டில், ஆரம்பத்தில் கட்டுப்பட்டிருந்த டெங்கு, பன்றி காய்ச்சலின் தாக்கம், அக்டோபரில் விஸ்வரூபம் எடுத்தது.மாநிலம் முழுவதும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதன் காரணமாக, இந்தாண்டில், டெங்கு காய்ச்சலில், 3,636 பேர் பாதிக்கப்பட்டு, 13 பேர் உயிரிழந்துள்ளனர். பன்றி காய்ச்சலில், 1,974 பேர் பாதிக்கப்பட்டு, 27 பேர் உயிர் இழந்துள்ளனர். அக்., முதல் அதிகரித்து வந்த காய்ச்சலின் தாக்கம், தற்போது குறைந்து உள்ளது.இது குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரி கள் கூறியதாவது:தமிழகத்தில், டெங்கு, பன்றி காய்ச்சல் தாக்கத்தால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, அக்டோபரில், தினமும், 15 ஆயிரம் பேராக இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை, 7,000 ஆக குறைந்துள்ளது. காய்ச்சலின் தாக்கம் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.