டிசம்பர், 4 முதல், 'ஸ்டிரைக்' ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, டிச., 4 முதல், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து விவாதிக்க, ஜாக்டோ - ஜியோவின் ஆலோசனை கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், சங்க ஒருங்கிணைப்பாளர்கள், சங்க முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், சங்கர பெருமாள் கூறியதாவது:'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்' என, சட்டசபையில், தமிழக அரசு அறிவித்தது. பல மாதங்கள் ஆகியும், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஊதிய முரண்பாடு மற்றும் பதவி உயர்வு வழங்குவதிலும், ஏராளமான குளறுபடிகள் உள்ளன. அவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டும் என, பல முறை வலியுறுத்தி விட்டோம். எங்கள் கோரிக்கையை, அரசு இன்னும் நிறைவேற்றவில்லை; கமிட்டிகள் அமைத்தும் பயனில்லை. எனவே, டிச., 4 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 23 முதல், குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என, இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. பல்வேறு சங்கங்களும், அடுத்தடுத்து போராட்டத்தை அறிவித்துள்ளது, அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது.