வங்கக் கடலில் அடுத்த 3 தினங்களில் புயல் உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக் கடலில் அடுத்த 3 தினங்களில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய அந்தமான் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 7 செ.மீ. மழையும், நன்னிலத்தில் 5 செ.மீ. மழையும், குடவாசலில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இது நேற்று குறைந்த காற்றழுத்தமாக மாறி மத்திய அந்தமான் பகுதியில் நிலவி வருகிறது. அடுத்து மேற்கு வட மேற்காக நகர்ந்து வலப்பெற்று புயலாக மாறும்.
இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் புயலாக மாறும் என்பதால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக 10ம் தேதி அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கும், 11ம் தேதி வங்கக் கடல் மற்றும் வட அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 12ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.