ஜனவரியில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் நவ.26 முதல் விண்ணப்பிக்கலாம்


Image result for 8 th std exam

தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நவ.26-ஆம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.
 
இந்தத் தேர்வுக்கு 1.1.2019 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் நவ.26-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் டிச.5-ஆம் தேதி புதன்கிழமை வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Nodal Centre) நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175- பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.
 
முதல் முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள், ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல்களைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவித்துள்ளார்.