பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோரும் நீட் தேர்வினை எழுதலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பொதுப்பிரிவில் 25 வயதுக்கும்
மேற்பட்டோரும் நீட் தேர்வினை எழுதலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வயது வரம்பு தளர்வு கோரி தொடரப்பட்ட பொது நலன் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கும் உச்ச நீதிமன்றம், இறுதித் தீர்ப்புக்கு அனைத்து உத்தரவுகளும் கட்டுப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயது வரை நீட் தேர்வுக்கு அனுமதிக்கப்படும் நிலையில், பொதுப்பிரிவில் 25 வயதுக்கும்  மேற்பட்டவர்களும் நீட் தேர்வை எழுத வயது வரம்பில் தளர்வு அளிக்க வேண்டும் என்று கோரி கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து விரைவில் இறுதித் தீர்ப்பை வெளியிட இருக்கும் நிலையில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு, இரண்டு நாட்களில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு, அது இடைக்கால உத்தரவுக்கு எதிராக அமைந்தால் பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.