பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் வியாழக்கிழமை (நவ. 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் வியாழக்கிழமை (நவ. 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, அதன் புறநகர்ப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதால் சென்னை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. மீலாது நபியையொட்டி, புதன்கிழமை (நவ. 21) அரசு விடுமுறை என்றாலும், சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் சில தனியார் பள்ளி, கல்லூரிகள் செயல்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், புதன்கிழமை தனியார் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படக் கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது.
இன்று விடுமுறை: இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 22) பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிந்திருந்தது. இதையடுத்து, சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ.22) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
இதேபோன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் மகேஸ்வரிரவிக்குமார் , பா. பொன்னையா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
விழுப்புரம், புதுச்சேரியிலும்...: பலத்த மழை எச்சரிக்கை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (நவ. 22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி பிராந்தியத்திலும் வியாழக்கிழமை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில பள்ளிக் கல்வி இயக்குநர் ருத்ர கெளட் தெரிவித்தார்