மின்சாரம் இன்றி, 16 லட்சம் இணைப்பு உயிரை பணயம் வைக்கும் ஊழியர்கள்

தமிழக மின் வாரியத்தின் களப்பிரிவு ஊழியர்கள், புயலால் பாதிக்கப்பட்ட, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில், 16 லட்சம் இணைப்புகளுக்கு, மீண்டும், மின்
வினியோகம் செய்வதற்காக, உயிரை பணயம் வைத்து, வேலை செய்கின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில், சில தினங்களுக்கு முன், 'கஜா' புயல் கரையை கடந்தது. இதனால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்கள், கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மேற்கண்ட மாவட்டங்களில், மின் வினியோகம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட, ஒரு லட்சத்திற்கும் அதிகமான, மின் கம்பங்கள்; 5,000 கி.மீ., துாரத்திற்கு, மின் கம்பிகள்; 846, 'டிரான்ஸ்பார்மர்'கள் சேதமடைந்துள்ளன.
இதனால், மேற்கண்ட மாவட்டங்களில், வீடுகள், கடைகள், விவசாயம் என, 56.20 லட்சம் இணைப்புகளுக்கு, மின் வினியோகம் தடைபட்டுள்ளது. மின் சாதனங்களை சீரமைக்கும் பணியில், ஏற்கனவே அம்மாவட்டங்களில் உள்ள, 8,792 ஊழியர்களுடன்; பிற மாவட்டங்களை சேர்ந்த, 5,132 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இது தவிர, ஆந்திராவில் இருந்து, 1,000; கேரளாவில் இருந்து, 200 பேரும் வந்துள்ளனர். நேற்று காலை வரை, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை தவிர்த்த, புயலால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில், 40 லட்சம் இணைப்புகளுக்கு, மீண்டும், மின் வினியோகம் துவங்கியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பகுதிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து என, வகைப்படுத்தி, அதற்கு ஏற்ப, மின் இணைப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதில், கிராம பஞ்சாயத்து, பேரூராட்சிகளில் உள்ள, மின் இணைப்புகளுக்கு, மின் சப்ளை செய்யும் சாதனங்கள் தான், கடுமையாக சேதமடைந்துள்ளன.
மாநகராட்சி பகுதியில் இருந்த, 10.68 லட்சம் இணைப்புகளில், 20ம் தேதி காலை வரை, 10.50 லட்சம் இணைப்புகளுக்கு, மின் சப்ளை செய்யப்படுகிறது. நகராட்சிகளில் இருந்த, 10.57 லட்சம் இணைப்புகளில், ஒன்பது லட்சம் இணைப்புகளுக்கும்; பேரூராட்சியில், 9.40 லட்சம் இணைப்புகளில், 7.50 லட்சம் இணைப்புகளுக்கும், மின் சப்ளை செய்யப்படுகிறது.
கிராம பஞ்சாயத்துகளில், மொத்தம் உள்ள, 25.52 லட்சம் இணைப்புகளில், 12.50 லட்சம் இணைப்புகளுக்கு, மின் சப்ளை துவங்கியுள்ளது. மின் வினியோகம் செய்ய வேண்டிய, எஞ்சியுள்ள, 16.20 லட்சம் இணைப்புகளில், தஞ்சை, புதுக்கோட்டை, நாகையில் தான், 90 சதவீதம் மேல் உள்ளன. அம்மாவட்டங்களில், மின் சப்ளை இயல்பு நிலைக்கு திரும்ப இரு வாரங்களாகும். இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -