கஜா புயல் 15ம் தேதி கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்


சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நவம்பர் 15ம் தேதி கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சென்னை - நாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நவம்பர் 15ம் தேதி பிற்பகலில் கடலூர் - பாம்பன் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 720 கி.மீ. தொலைவில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 24 மணிநேரத்தில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல், சென்னையில் இருந்து கிழக்கு - வடகிழக்காக 720 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு வடகிழக்காக 820 கிலோ மீட்டர் தூரத்திலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு மற்றும் தென் மேற்காக நகர்ந்து வரும் 24 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாக வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் அதே தீவிரத்துடன் நீடிக்கும். அதன்பிறகு மேற்கு தென்மேற்காக நகர்ந்து சற்று வலுவிழந்து வடக்கு தமிழகக் கடற்பரப்பில் கடலூர் - பாம்பன் பகுதிகளுக்கு இடைப்பட்ட தூரத்தில் நவம்பர் 15ம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் சின்னமானது சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத் தீவுகளை தொட்டபடி விரிந்து பரந்து உள்ளது.
இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் ஒரு சில இடங்களில் நவம்பர் 14ம் தேதி இரவு முதல் கன மழை பெய்யக் கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் மணிக்கு 45 - 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். இது படிப்படியாக உயர்ந்து 14ம் தேதி நள்ளிரவில் மணிக்கு 80 - 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். அந்த நேரத்தில் கடல் பரப்பு மிக மோசம் முதல் மிக மிக மோசம் என்ற நிலையில் இருக்கும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி நவம்பர் 14ம் தேதி இரவு வரை புயல் கரையை கடக்கும் வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும்.
கன மழையை பொறுத்தவரை தஞ்சை, திருவாருர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், புதுவை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழையும், ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழையும் பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.