பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை:பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

'பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் கோபியில், நேற்று அவர் கூறியதாவது:நவ.,15ல் ஆசிரியர்களுக்கு, பட்டயக்கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, ஒரு மாவட்டத்துக்கு, ௧௦ ஆசிரியர்கள் தேர்வு செய்ய உள்ளோம்.நவீன உலகத்துக்கு தகுந்தாற்போல், பாடத்திட்டத்தை மாற்றினால் தான், கல்வியில் பிற மாநிலங்களுடன் போட்டி போட முடியும். மத்திய அரசு கொண்டு வரும், பல்வேறு பொதுத்தேர்வுகளை சந்திக்கும் வகையில், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

 'நீட்' தேர்வுக்கு முழு விலக்களிக்க, வேண்டுகோள் விடுத்தாலும், தவிர்க்க முடியாமல் பயிற்சி அளிக்க வேண்டிய சூழல் இருக்கிறது.பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும், ஆசிரியர்கள் மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முதன்மை செயலர், மாவட்ட கலெக்டர் கண்காணிக்கின்றனர். இதுபோன்ற தவறுகள், இனி எங்கு நடந்தாலும், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.