ஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை, டிசம்பர் இறுதிக்குள் அமலுக்கு வரும்-அமைச்சர் செங்கோட்டையன்

''பள்ளிகளில், 'டிஜிட்டல்' வருகை பதிவேடு முறை, விரைவில் அமலுக்கு வரும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.


சென்னை, போரூரில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 'ஸ்மார்ட்' வகுப்பு கட்டடத்தை, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி: இலவச சைக்கிள் மற்றும், 'லேப்டாப்' அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். இணையதள இணைப்புடன் கூடிய, ஐ.சி.டி., என்ற, கணினி முறை கல்வி வகுப்பு, 3,000 பள்ளிகளில், நவம்பர் இறுதிக்குள் அமைக்கப்படும்.

அரசுபள்ளிகளில், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், டிஜிட்டல் முறையில், வருகை பதிவேடு திட்டம் வர உள்ளது. சில பள்ளிகளில், பரீட்சார்த்த முறையில், அமலுக்கு வந்துள்ளது. எந்தெந்த பள்ளியில், இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என, முதல்வருடன் ஆலோசித்து, முடிவு எடுக்கப்படும்.ஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேடு முறை, டிசம்பர் இறுதிக்குள் அமலுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில்,தமிழக அரசின் நகரமைப்பு மற்றும் திட்டமிடல் துறையான, டி.டி.சி.பி., அங்கீகாரம்பெறாத கட்டடங்களில் உள்ள, தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு, மே, 2019 வரையில், ஓராண்டுக்கு அங்கீகார நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை, பள்ளி நிர்வாகிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் நேற்று வழங்கினார்.